×

வாயுக் கசிவை தொடர்ந்து எண்ணூர் உர தொழிற்சாலை இன்னும் இயங்க தொடங்கவில்லை: கோரமண்டல் நிர்வாகம் விளக்கம்

சென்னை: கோரமண்டல் உரத் தொழிற்சாலை இன்னும் இயங்க தொடங்கவில்லை என நிர்வாகம் விளக்கம் அளித்துள்ளது. வாயுக் கசிவைத் தொடர்ந்து எண்ணூர் உர தொழிற்சாலை இன்னும் இயங்க தொடங்கவில்லை என கோரமண்டல் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. சென்னை எண்ணூரில் கடற்பரப்பில் இருந்து கோரமண்டல் தனியார் உர ஆலைக்கு கடலுக்கு அடியில் செல்லும் குழாயில் உடைப்பு ஏற்பட்டு கடந்த 26ம் தேதி நள்ளிரவில் வாயு கசிந்தது. இதனால் ஆலைக்கு அருகே உள்ள 8 கிராமங்களில் வசித்து வந்த பொதுமக்களுக்கு மூச்சுத்திணறல், மயக்கம் உள்ளிட்ட உடல்நல பாதிப்புகள் ஏற்பட்டன.

அம்மோனியா வாயு கசிவால் பாதிக்கப்பட்ட 52 பேர் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டனர். இதனால் கொந்தளித்த அப்பகுதி மக்கள், கோரமண்டல் ஆலையை முற்றுகையிட்டனர். தொடர்ந்து தொழிற்சாலை முன் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து மக்களுக்கு பாதிப்பு ஏற்பட்டதால் ஆலை இயங்க தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் தடை விதித்திருந்தது. இதனிடையே, எண்ணூரில் கோரமண்டல் தொழில்சாலை மீண்டும் இயங்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியானது.

பாதுகாப்பை உறுதி செய்த பின் மீண்டும் செயல்பட வல்லுநர் குழு அனுமதி அளித்துள்ளது என்றும், நிறுவனத்தின் அவசரகால நடவடிக்கைகளுக்கும் வல்லுநர் குழு ஒப்புதல் அளித்துள்ளது என்றும் தகவல் வெளியானது. இந்நிலையில், வாயுக் கசிவைத் தொடர்ந்து எண்ணூர் கோரமண்டல் உரத் தொழிற்சாலை இன்னும் இயங்கத் தொடங்கவில்லை என நிர்வாகம் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. கோரமண்டல் நிறுவனம் மீண்டும் திறக்கப்பட்டதாக வெளியான செய்தி தவறானது என நிறுவனம் விளக்கம் அளித்திருக்கிறது. மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் நெறிமுறைகளை பின்பற்றி வருவதாக கோரமண்டல் நிறுவனம் தகவல் தெரிவித்துள்ளது.

The post வாயுக் கசிவை தொடர்ந்து எண்ணூர் உர தொழிற்சாலை இன்னும் இயங்க தொடங்கவில்லை: கோரமண்டல் நிர்வாகம் விளக்கம் appeared first on Dinakaran.

Tags : Coramantel ,Chennai ,Koramandal Fertilizer Factory ,CORAMANDAL ,OIL FERTILIZER FACTORY ,SEABED ,Coramantal Administration ,Dinakaran ,
× RELATED சென்னை புதுப்பேட்டையில் ஆன்லைன்...